தெருவைத் தீர்த்து முடிக்கும் அவளது கோலங்கள் இருக்கும் இடத்தில்
3 புள்ளி 3 வரிசை கோலம் அவளை வரவேற்றது

அந்தி வானம் சாஞ்சதுமே அரட்டை அடிக்கும் அந்த தோழிகளும் அங்கில்லை
அவள் கூந்தல் ஏறி முக்தி அடையும் மல்லிகையும் அங்கில்லை

பள்ளிப் பருவ பாதுகாவல் லேடிபர்டூம் அங்கில்லை

பருவமெய்து படுத்திருந்த குச்சுக் குடிசையும் அங்கில்லை

அவள் கரத்திற்கு கழுத்து நீட்டிய கண்ணாடி வளையலும் அங்கில்லை

அங்கிருந்ததெல்லாம்

அவள் வாசம் மறந்து சுவாசம் அற்ற துளசிச் செடியும்

அவள் ஸ்பரிசம் தீண்டாமல் துருப்பிடித்த கதவுகளும்

அவள் கட்டுப்பாடில்லாமல் சிதரி கிடக்கும் விளக்கமாறு குச்சிகளும்
அவள் உடை உலர்த்தாத துயரில் தலை தொங்கிய கொடிக்கயிறும்
அவள் முகம் கழுவையில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டிற்காக வெறும்
நெற்றியுடன் காத்திருக்கும் கண்ணாடியும்

அவளைப் பிரிந்த சோகத்தில் தோசைக்கல் பிடித்து தழும்பு போட்டுக் கொள்ளும்
அவளின் பள்ளிச் சீருடையும்

அவள் ஞாபகம் பூசிய வீட்டு சுவர்களும்

அவள் பாதம் பட படைத்திருந்த வாசற்படிகளும்

அவளுள் தன்னைக் காணும் அம்மாவும்

உள்ளூர உரிமையும்

வெளியூர தயக்கமுமாய் மாமியார் விட்டு உறவுகளுடன்

தன் வீட்டு படியேறி பிரசவத்திற்கு வருகிறாள்

தன் பேறு கால நினைவுகளுடன் தன் மகளை வரவேற்கும் அன்னையின் ஏக்க
ஊற்று

மகளின் நெற்றியில் முத்தமாய் சுரக்கிறது

தனக்கு தாய்மை தந்த தன் மகள் தாயாகும் தருணத்திற்கு தவமிருந்த தாய்க்கு
தித்திக்கும் தருணம்

தேனிலே தத்தளிக்கும் தென்னகத்து கருவாடும்

சுண்டி இழுக்கும் சுவரொட்டிப் பொறியலும்

வெள்ளைச் சோறும் வெள்ளைப் பூண்டு குழம்பும் வெள்ளமெனப் பரிமாறி
விரல் அமுக்கி சொடக்கெடுத்து

அடிவயிற்றில் ஆயில் மசாஜ் செய்து

உடல் மொழி மாற்றங்கள் உணரச் செய்து

உடல் அதிராமல் நடக்க வைத்து

உதிரம் ஊற உத்திகள் உபதேசித்து

தூளியிலிட்டு துயிலுறங்கும் படலம் தவிர

அவள் குழந்தையில் அனுபவித்த அனைத்து உபசரியங்களும் உருவாக்கி
உயிரென காத்தாள்

புது உயிர் படைக்கும் பரம்பொருள் நிலை அடைந்த மகளை
இறைவனாய் பூஜிக்கிறாள்
அன்று ஒரு நாள் தான் இவளை உயிர்க்கும் நாளில் இவள் உணர்ந்ததைப் போல

ஆனால் ஏனோ,

உதிரம் உதிர்த்து

உடல் உருக்கி

உயிர் வரம் தரும் பெண் கடவுள்கள்
சன்னதியில் காட்சியளிக்காமல்
மடப்பள்ளியில் யாகம் வளர்க்கிறார்கள்

– மேனா
Sivagangai

0