கதிரவனின் ஒளி வந்து உமிழுமுன்
இருண்ட மரங்களின் அசைவுகள் சூழ்ந்திருக்க
பேச்சரவமின்றி சூழல் அமைதியுற்றிருக்க

நவீன பூங்காவின் மத்தியிலே
சீரற்று கிடக்கும் மேடை தளத்திலே

தனியாய் ஓர் நிழலுருவம்

அவள் ஆடுகின்றாள்

கைகளை மேலுயர்த்தி ஒன்று சேர்த்து
ஓங்கார வடிவமாய் நிற்கின்றாள்

மதியென்னும் பொருளியந்து
காலத்தின் இருப்பை உணராது
தன் என்னும் பாரத்தை வெளி யெங்கும்
இறக்கி விட்டு அவள் ஆடுகின்றாள்

இலைகளின் மறைவில் ரீங்காரமிடும்
காக்கை குருவிகளின் இசை யொலியினிலே
சலங்கையில்லா அவள் பாதம் மண்தொட்டு
பின் காற்றில் அளவளாவ அவள் ஆடுகின்றாள்

யாரும் கவனியேல் என்றந்த சிற்றிடை
நெளிவதும் மறைவதுமாய்
அவள் ஆடுகின்றாள்

யாராகி இவள் ஆடுகின்றாள்
கலை வேராய் தன்னையே மாற்றுகின்றாள்

முத்திரை ஒவ்வொன்றாய் காட்டுகின்றாள்
அதில் ஆதவன் தன் கதிரை வீசுகின்றான்

வெளியெங்கும் வெளிச்சம் பரவ
மஞ்சள் பூக்களின் மத்தியில் அவள் ஆடுகின்றாள்

புருவங்கள் நெளிய
கன்ன தசைகளும் நடுங்கிட
கண்டேன் அவள் முகம்

கலைகளின் பிரதிநிதியாய்
அக இன்பத்தின் ஆதாரமாய்
உலக இயக்கத்தின் ஒரே காரணமாய்
அவள் கண்கள் மிளிரியது

உள்ளத்தால் மெச்சியே
தொலைவிலேயே தரிசிக்கின்றேன்

அவள் ஆடுகின்றாள்

— காவியங்கள் படைப்போம்

10