நாளை மீண்டும் பரபரப்பாக இயங்க போவதை மறந்தோ அல்லது பயந்தோ ஏனோ பெரிதும் மௌனமாய் இருக்கிறது இந்த இரவு. அனைத்து கடைகளும் சாத்தப்பட்டு மூலைகளில் தெரு நாய்கள் படுத்து கொண்டிருக்கின்றன. இடைவெளி விட்டு மெதுவாய் உரசி செல்கிறது குளிர்காற்று. நடையினில் வேகம் சேர்க்காமல் எனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். இரவின் இக்காட்சியை ஏன் யாரும் அனுபவிக்க ஆசைப் படுவதில்லை,

உண்மையில் இரவு அனைவற்றுக்கும் கருமைப் பூசி பிரிவினையை போக்குகிறது. யாவற்றையும் கடந்து தன்னைப் பற்றி அலசி ஆராய நேரம் தருகிறது. ஓய்வென்பது உடலுக்கு மட்டுமில்லை மனத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது, அதனை இந்த நேர நடை இலகுவாக்குகிறது.

பெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் இறந்த காலத்தின் சோகங்களையும் இரவினில் புதைத்து விட்டு தோண்டி கொண்டேயிருக்கிறார்கள். இரவு எளிதில் கடந்து விடுவதும் நீண்டு கொண்டே இருப்பதும் அவரவர் எண்ண ஓட்டங்களினால் வேறுபடுகிறது.

மனம் பேதலித்து குழந்தைப் பருவம் எய்தி எந்நேரமும் சாலையில் திரிந்து ஏதேனும் பிதற்றி கொண்டிருப்பவர்களும் இரவு நேரங்களில் ஓர் இடத்தில் அமைதியாய் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. அந்த இடம் பெரும்பாலும் அவர்களுக்கு அன்பாய் ஓர் வேளை உணவளித்தவர்களின் வீட்டு முன்பாக இருக்கும். அந்நேரங்களில் அவர்களின் முகத்தில் ஓர் தெளிவு தெரியும். அத்தெளிவினை நோக்கினால் அவர்கள் யாரென்பது புரிந்து விடும்.

இரவின் கருமையில் உழைத்து கலைத்த முகங்களின் அழகு புலப்படும், அதில் தெரியும் சிறு புன்னகையும் நம்மை சிலாகித்து விடும்.

இரவு நேர உணவிற்கு பின்பு பாத்திரங்களை கழுவி விட்டு மறுநாள் காலை சமையலுக்கு எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு களைத்து படுக்கைக்கு வரும் தாயிற்கு, தனக்காக உறங்காமல் காத்திருக்கும் தன் குழந்தையின் சிரிப்பினில் தன் அயர்ச்சி எல்லாம் பெயர்ச்சி அடைந்திருக்கும். அன்று பள்ளியில் நடந்தவற்றை யெல்லாம் அவர்கள் மழலை மொழியில் கேட்க கேட்க விடியாத இரவிற்கே அவள் ஆசை நீடிக்கும்.

விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் உறங்கி உறங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தின் ஜன்னலின் வழியே காணும் காட்சிகள் யாவும் ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு இனம் புரியாத கிளர்ச்சியை மனத்தினில் உண்டு பண்ணும். அவை விடியல் தருணங்களில் புது பரிமாணத்தை அடைந்திருக்கும்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

வள்ளுவனின் இக்கூற்றுப்போல், நேரில் பார்க்க முடியாத காதலரை இரவு நேர கனவுகளில் மட்டுமே கண்டு ஆனந்தப் படுபவர் பலர். அவர்களின் ஏக்கங்கள், ஆனந்தம், உற்சாகம், ஏமாற்றம் எல்லாவற்றையும் இந்த இரவுகள் மெல்ல அசைப் போட்டுக் கொண்டேயிருக்கும்.

அழுகையும் சிரிப்புமாய் உணர்வுகள் வெளிப்படுவது பகலை காட்டிலும் இரவுகளில் அதிக உண்மைத் தனத்தை கொண்டிருக்கும். அவை நெருக்கமானவர்களுடன் நெருடலுடன் இணைந்திருக்கும்.

இரவுகள் உறக்கத்திற்கு மட்டுமானதல்ல அவை வாழ்க்கையின் தருணங்களை அழகாய் கோர்க்கும் நார்கள். அந்த நார்களின் வலிமையை நல்ல உரையாடல்களாலும் சிந்தனைகளாலும் வலுப்படுத்துங்கள், உங்கள் வாழ்க்கை நறுமணத்தை வீசிக் கொண்டேயிருக்கும்.

– காவியங்கள் படைப்போம்

22