இருள் கூடியிருக்கும் அறையினில்
அமைதியாய் சில பேச்சுக்கள்
அளவாய் விசாலமாய்

புதை படிமங்களை யாதென்று
தெரியாமல் சிதைத்திட கூடாதென்று
மெதுவாய் தூசிகள் அகற்றுவதாய்
அந்த பேச்சுக்கள் நினைவுகளை
கண்டறிகின்றன

பதின்ம வயதுகள் சிதிலமாய்
அதில் சில தன்மை மாறாமல்
சிதறிய வண்ணம் கிடைக்கின்றன
கீரல்களாய் இருக்கும் இடத்தில்
தடயங்கள் தெரிகின்றன
அதில் சில முகங்கள் தோன்றி
மறைகின்றன

சில அழுந்த பதிந்த
அடையாளமும் இருக்கின்றன
அவை இன்றும் தொடர்வதால்
உதடுகள் மட்டும் மெலிதாய்
விரிகின்றன

கைகளை இறுக்கிக் கொண்டு
அவன் தோள் பட்டையில் சாய்ந்து கொண்டு
அவள் அகழ்வாராய்ச்சி தொடர்ந்தது

அவன் தோண்டுவதற்கு
அனுமதி தந்து
இன்னும் ஆழ சென்றான்

145