பொன்னியின் செல்வன் படித்து முடித்து விட்டு, இராஜ ராஜனை பற்றி மேலும் அறிந்து கொள்ள என் மனம் தவித்து கொண்டிருந்தது. நண்பர் ஒருவரின் மூலம் “உடையார்” புதினம் பற்றி அறிய நேர்ந்தது. பொன்னியின் செல்வன் போல் யாரால் மற்றொரு வரலாறு புதினத்தை தர முடியும் என்று உடையாரை சற்று சந்தேகத்துடன் வாசிக்க துவங்கினேன். ஆறு பாகங்கள் கொண்ட பெரிய புதினம். இரண்டே வாரத்தில் ஆறு பாகங்களையும் படித்து விட்டு என் கால்கள் சென்றடைந்த இடம் தஞ்சாவூர் பெரிய கோவில். ஆம், எவ்வளவு நேர்த்தியான வார்த்தைகள், அழகான வர்ணனைகள். இராஜ ராஜனின் ஒவ்வொரு அசைவினையும் கண் முன் நிறுத்துகின்ற வரிகள். அவனின் வீரத்தை, கூரிய அறிவினை, தமிழ் குலத்தின் சிறந்ததோர் மாமனிதனை, பாரதி கண்ணணை எவ்வாறு இரசித்து எழுதினானோ அவ்வாறு இரசித்து இன்புற்று கசிந்துருகி எழுதியுள்ளார்.

பால குமரனை எழுத்து சித்தர் என்பதில் எவ்வளவு பொருத்தம். தஞ்சை கோவிலை கட்டிய விதத்தையும் அதன் நுட்பங்களையும் இவ்வளவு அழகாக ஒரு புதினத்தில் கொண்டுவர எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். ஆராய்ச்சி நூலையும், கைவிட்டு கீழ் இறங்க மறுக்கும் சுவையான நாவலையும் ஒருங்கே அமைத்திருக்கிறார். பொதுவாய் கதையின் நாயகனை மட்டுமே சுற்றி அனைத்து படைப்புகளும் இருக்கும், ஆனால் பாலா கடை மக்களின் சராசரி வாழ்க்கை முறையையும் அவர்களின் உணவு முறைகளையும் எவ்வளவு நேர்த்தியாக வடித்திருக்கிறார். கதை கருவுடன் அத்தனை சுவாரஸ்யங்களையும் அவர் இணைத்திருக்கும் விதம் அருமை. இடைவிடாது வாசித்து கொண்டே இருக்க செய்யும் அந்த ஈர்ப்பு அவர் எழுத்துக்களில் உண்டு.

எழுத்து சித்தர் பால குமாரன் நினைவஞ்சலி

தொடர்ந்து அவர் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். அவரின் பெண் கதாபாத்திரத்திங்கள் கூர்மையான இலக்கு கொண்டவை துணிச்சலான சொற்களை உதிப்பவை. பலரும் ஏற்க மறுத்த உண்மைகளை சிறுகதைகளின் மூலம் சற்றே கவனிக்க வைப்பவை. அவர் எழுத்துக்களை அதன் ஆத்மாத்ம கருத்துக்களை சொல்லி மாளாது.

அத்தகைய மாமனிதரின் இறப்பு என் மனத்தை கனமாக்கி விட்டது. அவரை வாசித்தவர்களின் மனத்தில் என்றும் அவர் நீங்காதிருப்பார் என்பதில் சிறிதும் எனக்கு ஐயமில்லை. அவர் ஆன்மா நிச்சயம் அவர் விரும்பிய இடத்திற்கு அவரை அழைத்து சென்றிருக்கும்.

வாழ்க தமிழ் !
வளர்க தமிழ் !

6