இது விதியின் விளையாட்டு
விழிகள் ஏற்க இயலா பெரு – வெளிச்சத்தின்
இருள் தெளிக்கும் விளையாட்டு
இருண்டிடாத பகலில் கண்ட கனவுகளை
இருள் போர்த்தி மறைக்கும் – விதி
யவன் விளையாட்டு
இறுகி பிணைந்து கோர்த்த கைகளை
சட்டென விலக்கி விட்டு – சிரிக்கிறான்
தரையினில் துவள்வதை கண்ணார இரசிக்கிறான்
கலங்கிடாதே நெஞ்சே
தினம் திண்ணமாய் – நின் நெஞ்சம்
இறுக்கமாய் மாற்றிவிடு
இன்னும் யாது செய்வான் செய்யட்டுமே
சிறுதுளி கண்ணீரையும் – சிந்திடாதே
மௌனத்தை யாக்கு நின் சிந்தனையாய்
அன்பினை அடக்கிடுவான்
உழைப்பினை வீணாக்கி விடுவான் – நின்
முயற்சியை தளர்த்திடாதே
பூக்களை கசக்கும் போது அதன்
வாசத்தின் வீச்சு மிகும் – அதுங்கால்
நின் எண்ணத்தில் நேர்மறை கூட்டிடுவாய்
நீண்டிடும் இரவினிலே இருளை விட
அடர்த்தியாய் எண்ணங்கள் சூழ்ந்திருக்க
தொண்டைக் குழி வரண்டும்
இமைகள் நனைந்தும்
கடக்க மறுக்கும் நொடிகளிலே
நெஞ்சின் பாரம் மிகுந்திருக்க
சொற்களை அலங்கரித்து
மெது மெதுவாய்
வாய் விட்டு சொல்லி
உரக்கமாய் அழுது விடு
கண்ணீர் துளிகளிலே
யாவற்றையும் கரைத்து விடு
உனக்காய் சில பேர்
உன்னுடன் உண்டு
அவர்களுக்காய் உன்
முயற்சியை தொடர்ந்திடு
விதியானவன் விளையாடட்டும்
வெற்றியினை தீர்மானிப்பது நீ தான்
நின் முயற்சி தான்
உங்கள் கருத்தினை பதிவிடுக