துயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)…
மாலை சோம்பல் தரித்து வானோ
நிலவை இழுத்து மடியில் போடும்..
மதம்கொண்ட பிளிறாய்
மதியோ
மயங்கி மயங்கி வானில் ஆடியோடும்..
அண்டம் அணைந்து துயிலும் நேரம்
பிண்டமனைத்தும் பூசிய கண்கள்
அவ்வுச்சிக் குடிசையில்
அழகாய் மினுக்கும் அகலாய் ஆக
அன்னை நிலவை அயர்ந்து தொடர்வாள்..
-சங்கவி

காஞ்சிபுரம்

மன்னவன் மையல்

நுட்பம் தேர்ந்து நுண்கலை பயின்று
நிற்கும் படையை நில்லா தாக்கும்
திட்பம் பிறழாத் திறன்மிகு உள்ளம்
தன்நிலை மறியத் தவறித் தரைவிழத்
தட்பம் தருவிழித் தையல் பார்வை
தைக்கும் அம்பெனத் தாக்கிச் சரிக்க
வெட்கம் ததும்பும் வனிதை வனப்பில்
வேந்தன் மனதை வெற்றி கொண்டாள்

நாகேந்திரன்

விருதுநகர்

நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

காமம் தலைக்கேறிய
உன் வக்கிரக் கண்களால்
எங்கேயும் என்னை
வன்புணர்வு செய்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

வெறும் பாலுறுப்பாகவே
என்னை எப்போதும் பார்க்கிறாய்
நான் ஆறாக இருந்தாலும்
அறுபதாக இருந்தாலும்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

என்னை அவமானப்படுத்த
நடத்தை சரியில்லை என
எளிதாகச் சொல்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

நான் அடைந்த உயரமெல்லாம்
பெண்ணாக இருப்பதால் என
பொதுவெளியில் பகடி செய்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

கூண்டைத் தூக்கிக்கொண்டே
பறக்கச் சொல்கிறாய்
சாவியை உன் கையில் வைத்துக்கொண்டு
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

சாலைகளில்
உன் வாகனத்தை நான் முந்துவதையே
ஏற்றுக்கொள்ள முடியாத நீ
எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

நீ ஈட்டும் பொருள்
உனது என்கிறாய்
நான் ஈட்டும் பொருளும்
உனதே என்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

நான் எப்போதும் இருக்கிறேன்
தாயாய் மகளாய் சகோதரியாய்
தோழியாய் துணைவியாய்
ஆனால் நீ மட்டும் இருக்கிறாய்
எப்போதும் ஒரு ஆணாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

க.ம.மணிவண்ணன்
திருச்சிராப்பள்ளி

1