செவி வழி வரும் செய்தி !!

செப்பிய வாய்தனின் உண்மை அறிந்திடா ,
கேட்டிட்ட செவியும் ஊர் பல செப்புமே ,
இல்லாள் ஒரு விடயத்தை
உரு தந்து செதுக்குமே ,
பயன் அறிவரோ , பயம் பறப்பித்து ,
பித்தும் மதி ஏற்றி , மதி கெட்டு ,
பட்டும் புரியாது , பித்தும் களையாதே !!!!!!

பிரவின்

சென்னை

 

இரட்டை வேடம்

தொலைதூர வானின்
தொட்டு விடமுடியாத
தூரத்தின் நகலாய்
எனக்கும் உனக்குமான இடைவெளி
எள்ளளவும் குறையாமல்
அதிகரித்தபடியே உள்ளது

விடியலின் வெயில் யாசித்து நிற்கும்
குளிர்கால புற்களைபோல
யாசகம் நிறைந்த
விடியாத இரவுகளை
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்

கவிதைகளுக்கான கற்பனை
காற்றில் கரைந்து நிறைந்திருந்தாலும்
கண்ணில் விழுந்த துகளாய் நீ
கசித்துக் கொண்டிருக்கிறாய்
கவிதைகளோடு சேர்த்து
கண்ணீரையும்தான்

வார்த்தைகள் நிறைந்து வழிதடத்தில் – அவை
ஒவ்வொன்றின் மீதும்
கண்ணீர் விழுந்து கவிதைகளாய்
மலர்கின்றன

காலணி அணியாத மழலையொன்று
கற்களின் உராய்வுகளை கூட
கண்டுகொள்ளாமல் அதை
பறித்திட நெருங்குகிறது

இரட்டை வேடம்
கதைகளில் மட்டுமா
கவிதைகளில் இல்லையா…
இங்கு
கண்ணீரும் நானே அந்த
கைகளும் நானே….!

நரேன் குமார் N L

வேலூர்

பொருள்வயிற் பிரிதல்

ஒற்றைக்கால் பனைமரங்கள் ஓங்கி வளர்ந்த எம் ஊர்..
கூட்டமாய் நாரைகள் இரை தேடும் கண்மாய்..
வெள்ளைக்கழுத்து பருந்துகளும் வானமெங்கும் வட்டமடிக்க
எங்களுக்குத் தான் பிழைப்பில்லை எங்க ஊரு முகவையிலே..

கருவேல மரங்களில் கூடு கட்டா பறவைகள்
உப்புக் கடற்காற்றில் வெந்து போன மனங்கள்..
பிழைப்பிற்காய் பொருள்வயிற் பிரிகின்றோம்..
பாலைவன மணலில் திரைகடல் ஓடி திரவியம் தேடப் போகின்றோம்..

காத்தலும் காத்திருத்தலும் எங்கள் நெய்தல் நிலத்து நிரந்தர நிமித்தங்கள்..
மனைவியின் மஞ்சள் கயிற்றில் ஈரம் காணும் முன்னே
பொருள் தேடப் போகின்றோம்…

மனைவாங்கி வீடு கட்ட எங்கள் மனையறம் துறக்கின்றோம்..
கருவில் இருக்கும் பிள்ளை கான்வென்டில் படிக்க முத்துப்பிள்ளையின் முகம் காணாமல் போகின்றோம்..
வேறு தேசம் தேடி பிழைப்புக் காண எங்கள் இளமை தேகம் அடகு வைக்கின்றோம்..

அடங்கிப்போன உணர்வுகளையும் அடக்க முடியா வேதனைகளையும் சுமந்து போகின்றோம்..
அயல்நாட்டில் சிந்தும் வியர்வை
சொந்த மண்ணில் விலைபெறாது
என வெறுத்துப்போகின்றோம்..

வற்றிப்போன இரத்தத்துடனும் சுருங்கிப் போன தேகத்துடனும் திரும்பி வரும் போது உறவுக்கு தலைவலி மருந்து பிள்ளைக்கு
சாக்லெட் மனைவிக்கு மணக்கும் சோப்பு என பார்த்து பார்த்து
வாங்கிக் கொண்டு…

எனக்கென,
பொருள்வயிற் பிரிதலில் தொலைத்த நம்
வாழ்க்கையில் மிச்சமிருக்கும் உயிரை மட்டும் இறுக்கிப்
பிடித்துக் கொண்டு வாழும் ஆசையுடன் நம் வாசல் வருகின்றேன்..

நா. சுமித்ராதேவி

சிவகங்கை

3