இரண்டாம்‌ பதிப்பு…

விற்றுத்தீர்ந்தது எங்கள்‌ இளமைக்காலம்‌…
இரண்டாம்‌ பதிப்பு இனி எங்களுக்கு வேண்டாம்‌…

ஆம்‌..இளமையின்‌ முதல்‌ பாகம்‌ விரைவாய்‌ விற்றுத்தீர்ந்தது..

நரைமுடியின்‌ நடனம்‌ காதோரத்தில்‌ ஆட
எங்கள்‌ ஆட்டத்தின்‌ விலை அற்றுப்‌ போனது..

கன்னக்கதுப்புகள்‌ சரிய எங்கள்‌ சரிரீம்‌ சுருங்கத்‌ தொடங்க
விலைமகளின்‌ விலைவாசி சரிந்துபோனது…

விதிவிட்ட வழியென்று வீதியோரம்‌ விலைக்கு வந்த
நடைபாதை பாவைகள்‌ நாங்கள்‌…

வயிற்றுக்காக மனதை விற்ற நவீன மாதவிகள்‌…
உயிரும்‌ உணர்வும்‌ மரத்திட்ட சதை வியாபாரிகள்‌..

ஊமை மனதில்‌ ஆயிரம்‌ கனவுகள்‌ தூங்க
இரவெல்லாம்‌ விழி மூடா சிவப்பு விளக்குகள்‌..

தகப்பன்‌ இல்லா பிள்ளைகள்‌ பெற்று ஆற்றில்‌ மிதக்கவிடா
சரித்திரம்‌ மறைத்திட்ட நாகரீக குந்தி தேவிகள்‌…

உடல்‌ விற்று சோறு வாங்கிடும்‌ பண்டமாற்று வணிகர்கள்‌..
வரி கட்டாத வாழ்க்கைப்‌ போராளிகள்‌..

வறுமைக்கோ… வலிமைக்கோ.. விதிக்கோ…சதிக்கோ…
இரையாகிப்‌ போன எங்கள்‌ இளமைக்காலம்‌ விற்றுத்தீர்ந்தது…

ஆம்‌….விற்றுத்தீர்ந்தது எங்கள்‌ இளமைக்காலம்‌…
இருந்தாலும்‌ இரண்டாம்‌ பதிப்பு எங்களுக்கு வேண்டாம்‌…

-நா. சுமித்ரா தேவி
தேவகோட்டை

4