இருளுக்கு பழகிய விழிகள்

செவிக்கொண்டு பலர் துயர் பார்க்கிறேன்.
மனம் கொண்டு அவர் துயர் உணர்கிறேன்.
இருள் பழகிய என் விழி வேண்டுமோ கண் கொண்டும் காணாமல் வாழ்வோர்க்கு?

இருள் என்பது விழியின்மை அன்று!
இருள் என்பது மனமின்மை..
இருள் என்பது மதியின்மை..
இருள் என்பது மனிதமின்மை.

புறக்கண் உண்டு உனக்கும் புழுவிற்கும் ,
உன் அகக்கண் எங்கே ஆறறிவே ?

கண்முன் பல அநியாயம்!
தடுக்க இயலாமல் நான்..
தடுக்க முயலாமல் நீ..
எதற்காக உனக்கிந்த பார்வை??
அதை கொடுத்துவிடு என்னிடம்,
தடுத்துவிடுகிறேன் நிகழும் அநியாயத்தையும்…அந்நிகழ்வை படம்பிடிக்க வந்தோரையும்.

பார்வையற்றவன் வாழ்கை இருளாகாது பட்டதாரியே!
பண்பற்றவன் வாழ்கையையே இருள் சூழ்கிறது.

பார்வையற்ற என் கண்ணில்
வெளிச்சம் மட்டுமே மிளிர்கிறது – நான்
காண்கிறேன் ,

அன்பற்றவன் அழிந்துப்போவதை,
அறிவற்றவன் அடங்கிப்போவதை,
குணமற்றவன் குன்றிப்போவதை,
கருணையற்றவன் காரிருளாய் போவதை,
வீரமற்றவன் வீணாய்போவதை,
பொறுமையற்றவன் சிதறிப்போவதை,
முயற்சியற்றவன் துவண்டுப்போவதை.

இவ்வாறு ‘அற்றவன்’ போவதைக் கண்டபின் கவலையுற்றேன், கண் உற்றவனும் தவறான பாதையில் செல்வதைக் கண்டு..

பார்வையை தடுக்கும் இரும்புத்திரையை
அகற்றி நல்வழிக்கு திரும்பிவில்லையென்றால்,
உன் தீயவழியின் இலக்கான மரணத்தை அடைவாய் ஒருநாள்..

— தீப்தி வேலாயுதம்
புதுக்கோட்டை

 

நடையின் ராஜா வீதியில் உலா

வெள்ளைக்கொம்பன் வீதியில் வந்தான்
கொள்ளை அழகால் நெஞ்சம் வந்தான்
துள்ளும் வீரம் நடையில் காட்டும்
எள்ளின் வண்ணன் பூமி அமுங்க
பள்ளம் செல்லும் பாதை முழுதும்
பிள்ளை தவழும் அழகின் நிலையாய்
கொள்ளும் சிந்தை துள்ளும் வடிவாய்
முள்ளின் வேலி பொடிக்கும் வள்ளல்
வண்ணபூச்சி சிறகைக்போலே
பறந்துவீசும் முறத்தின் காதில்
தென்றல் காற்று
துளிரும் என்று பிளிறும் களிரான்
மிடுக்காய் வந்தான்


செ கதிரவன்

சென்னை

4