காதலென்றால் என்ன?
கேள்வி வந்தது எனக்கு!
சமுத்திரத்தின் உப்பு நிறைந்த உடலில்
சதைகிழிக்கும் ஊசியாய்
தித்திக்க நுழைகிறதே நதி
அது காதல்!
கிட்டாத காலமெனத் தெரிந்தும்
எட்டாத் தூரத்திலிருந்து விழும் ஒற்றைத் துளிக்காய்
கோடையில் ஏங்கி நிற்கிறதே மண்
அது காதல்!
ஊரை விழுங்கும் தெம்பிருந்தும்
சிறு தீக்குச்சியின் ஒற்றைத் தொடுதலுக்காய்
அடங்கி நிற்கிறதே நெருப்பு
அது காதல்!
புயலடித்து ஓய்ந்தபின்
காலொடிந்து வீழ்ந்த கிழட்டு மரத்தின்
உச்சி வருடியதே நொண்டித் தென்றல்
அது காதல்!
இருபத்தொன்பது நாட்கள் காத்திருந்து
இரவும் பகலும் எதிர்பார்த்திருந்து
முப்பதாம்நாள் முழுநிலா காண்கிறதே வானம்
அது காதல்!
காதலென்றால் என்ன!
பதில் கிடைத்ததா உங்களுக்கு?
— மு.முத்துக்குமார்
தென்காசி
உங்கள் கருத்தினை பதிவிடுக