அழகு தமிழில் ஓர் கவிதை வேண்டும்

அடுக்கடுக்காய் எதுகை மோனைதனை
அவை ஏந்தி தவழ்தல் வேண்டும்

இரு வரியில் முடிந்தாலும்
இரு நூற்றைத் தொட்டு தொக்கி நின்றாலும்
இரு இமைக் கொள்ளா உணர்ச்சிகள்
இரு தயம் உணர்ந்திடல் வேண்டும்

இன்பத்தின் எச்சங்களையும்
இன்னல் தரு துன்பத்தின் உறுதியினையும்

மனிதத்தின் மாண்புதனையும்
மண்ணின் ஈரந் தனையும்

எண்ணத்தின் கோர்வைதனில்
ஏதுவாய் தோய்ந்தெடுத்து

வண்ணம் பல அதற்களித்து
வாடா மலர்களாய் அவை இள நகை
வீசிட வேண்டும்

உறங்கிடும் குழந்தையின் கள்ளமற்ற சிரிப்பாய்
உயிர் பிரிந்த கிழவன்
உடல் நோக்கும் கிழவியின்
உள்ளத்தின் எண்ணமாய்

மகள் போன்று வளர்த்தப் பசு
மடி ஈன்ற கன்று முட்டும் இன்பமாய்
மனதை ஒன்றிட வேண்டும்

நூற்றாண்டுகள் கண்டத் தமிழ்
நுரை நுரையாய் பெருக வேண்டும்

எத்தனை எத்தனை இன்பங்களோ
என்றும் அத்துணையும் வரிகளில்
எளிதாக அமைய வேண்டும்

ஐம்புலன்கள் அகமகியும்
ஐம்பெரும் காப்பியங்கள் போல்

இந்நூற்றாண்டின் சிறந்த
இணையில்லா காவியம் படைத்திடல் வேண்டும்
இவ்வகையிலும் இன்பக் கவி இருந்திடல் வேண்டும்!

 

— காவியங்கள் படைப்போம்

32