அன்றொருநாள் சென்றிருந்தேன் அவள் வீட்டிற்கு
அவள் வீட்டு கிழவனுக்கு அறுபதாம் திருமணமாம்
நண்பர்களுடன் சேர்த்து வந்த அழைப்பாதனால்
நடுங்காமல் சென்றேன் அவள் கூட்டிற்கு

வாசல் வந்தழைத்தாள் பொதுவாய் அனைவரையும்
வா என்னுடன் என்பதாய் தான் நான் கேட்டேன்
அறிமுகங்கள் யாவும் முறுவலாய் முறைப்பதாய் தோன்றிற்று
அவையாவும் துளியும் பிடிக்கவில்லை

யார் யாரோ யாராய் இருக்கட்டுமே
யார் கவலை கொண்டார்

அணிந்திருந்த ஆடையும்
அழகுற்ற புருவமும்
அளவளாவி செல்கின்ற திசையெல்லாம்
அடியேனும் சென்றேனே

கிழவனுடன் அறிமுகம்
கிழவியின் வெட்கச் சிரிப்பு
கால் தொட்டு ஆசிர்வாதம்
அருகிலேயே நின்றிருந்தாள் – பல்
அனைத்தையும் காட்டி சிரித்திருந்தாள்

நட்டு வைத்த மரங்களை காட்டினாள்
நா சுவைக்கும் அதன் ருசி கனிகளை அங்கலாய்த்தாள்
பக்கத்து வீட்டு சுட்டிகளை அறிமுகப் படுத்தினாள்
பல் காட்டி அவைகள் மாமா என்றதை ஓரமாய் இரசித்தாள்

சிறு வயது புகைப்படத்தை
சினுங்கி கொண்டே காட்டினாள்

ஓரக்கண் பார்வைதனை வீசுவதில் வல்லவள்
ஒய்யார நடையாய் அருகருகே வந்து போனாள்

இத்தனையும் நடந்தவை கூட்டத்தின் மத்தியில்
இவன் மட்டும் தனியனாய் அகிலம் ஓர் பக்கமாய்

அவள் கை பரிமாற உணவுகள் இலைதனில் தவழ
அவள் விழி பரிமாறும் மௌனங்கள் இருதயம் நுழைய
அச்சிறு விரல் தீண்டும் போதெல்லாம்
அப்படியோர் பூரிப்பு உள்ளத்தை நனைத்ததுவே

இதற்கெனவே பிறந்தவனாய் நிமிடத்தை தின்றேனே
இவள் கண் ருசித்திடவே நொடிப் பொழுதும் வாழ்ந்தேனே…

2