#மேற்கால மல சூழ்ந்த
மேங் காட்டுப் பூமியில
மேய்ச்சலுல பொழப் போட்டும்
மேலூரான் பொன்னு நானு!

#ஒத்தப் பையன் பெத்து
ஒசரமா வளர வச்சு
உசுரயே உன் மேல
உக்காத்தி வச்சிருந்தேன்!

#இருக்காதா பின்னே..
இளந்தாரி ஆம்படயான்
எருதுமுட்டிச் செத்தப்புறம்
உன்ன விட்டு நாதியேது?

#மானாவாரி வெள்ளாமை
மழ பேஞ்சா மகசூலு..
இல்லாட்டி எரும மாட்டுத்
தீவனமா வூடு வரும்!

#காராம்பசு ரெண்டுகளும்
காப்பாத்துச்சுப் பாலால!
கறந்ததை வித்து வந்த
காசுல படிக்க வச்சேன்!

#பட்டணத்து ஐ ஸ்கூலு
பத்தாதுனு காலேஜி
எஞ்சினீரு ஆயிட்டீன்னு
கொஞ்சிக் கிடந்தேனே!

#சீமையில வேலயின்னு
சீவிச் சிங்காரிச்சு
சிலுக்குச் சொக்கா மாட்டி
சீக்கி போட்டுப் போனாயே!

#மாசம் மூணாச்சு..
மறுவரவு இன்னுமில்ல..
ஒரு வருசம் போனாத்தா
ஒசத்திச் சம்பளமாம்!!

#எதிர்பாத்துக் கிடந்தவள
இடியா வந்த சேதி..
மடி வளத்த ஆத்தாளை
துடிதுடிக்க வச்சுடுச்சே!

#ஊருலகக் கொல்ல வந்த
கூறு கெட்ட கொரனாவால்
தேரா நடந்த புள்ள – எந்தத்
தெருவோரந் திரியிரியோ?

#அயல்நாடு அத்தனையும்
அனலுப் பட்ட புழுவாட்ட
அழுதுட்டுக் கெடக்கிறதாம்!
ஐயோ, உனக்கென்னாச்சோ?

#தொட்டுப் புட்டாத் தீட்டாமே?
பட்டு கிட்டாப் பாவமாமே?
எட்டமா ஓடுனாலும்
இருமலில வருமாமே!

#கொடிக்காலுப் பொட்டலிலே
கொட்டாயி ஒன்னு போட்டு
குடியுங் குடித்தனமாக்
காலத்த ஓட்டிக்கலாம்!

#சீக்கு கீக்கு இல்லாம
சீக்கிரமா வந்து சேரு!
பண்ணையம் பாச்சலுனு
பாத்துப் பொழச்சுக்கலாம்!

#கொசுவத்தப் புடிச்சுட்டுக்
கூடவே சுத்துவியே? உன்னக்
கும்புடறஞ் சாமி!
கூடவந்து சேந்துக்கையா!

ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி

ஈரோடு

12