உயிர்ப்பு

உறவினர்கள் 
உதிர்த்தாலும்,
உதிரத்தவர்கள் 
உதிர்த்தாலும்,
உள்ளார்ந்த 
உணர்தலுடன்
உத்தமர்களிருப்பதால் 
தான் உலகம் இன்னும் 
உயிரோடிருக்கிறது.

— P.BALASUBRAMANIAN
Tiruppur


வேலை

கிட்டத் தட்ட தலையை முத்தமிடும் தென்னை
கட்டிப் பிடித்து கைகுலுக்கும் தென்றல்
எப்போதும் போல் எதார்த்தமாய் சிரிக்கும்
எதிர்வீட்டுக் குழந்தை

விடியுமுன் உதயமாகும் வாசல்கோலம்
எட்டுத் திசையும் குத்தகையெடுத்து
காற்று விற்கும் மொட்டை மாடி

இன்று மட்டும் புதிதா ?
காரணம் ஏதுமுண்டோ ? 

வேலையின்மையோ ?

சத்தம் போட்டு கேள்வி கேட்க ஆளில்லை
பதிலுரைத்ததாய் நினைவில் ஒரு நாளில்லை

இத்தனை அதிசயம் சுற்றி இருக்கையிலே
இரசிக்கும் தொழிலே என்னது

கூலி கொடுக்க மனமிருப்பின்
விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன..!

— இராஜா
சென்னை


உனக்குள்…நீ…

மலை  போல. பிரச்சனைகள்
   தலை  மீது  விழுகையில்
      மட்டைப்பந்து   ஆடலாமா நீ?

விவசாயிகள்  பலர்  தன்னை
     மண்ணில்  விதைக்கையில்
        வேடிக்கை   பார்க்கலாமா  நீ?

காவிரி   நீர்ப்   பிரச்சனைகள்
       கழுத்தை  நெரிக்கையில்
          கட்டுக்கதைகள்  பேசலாமா நீ?

தொடுவானம்  தொட.  வேண்டிய
           வயதில்  தொடுதிரையை
              தேய்த்து  தேயலாமா நீ?

பாரதி  கண்ட  கனவுகளை
      நிறைவேற்ற. பாய்ந்து
          வர. வேண்டும்  நீ!

முண்டாசுகவியின் கவிதையடா நீ
          முகநூலில்  முகத்தை
              ஒளித்துக் கொள்ளாதே இனி!

உண்மைகள்  ஒருபோதும்  ஓயாதடா
         உரைத்திடு  உனக்குள்  நீ!

இன்னமும்   வீண்பேச்சு  என்னடா
        எழுந்திடு    உனக்குள்  நீ!

தடைகள்  குறுக்கிட்டால்  என்னடா
        தகர்த்திடு  உனக்குள்  நீ!

— மோ.அபர்ணா
சிவகங்கை

மகளின் மடல்


தீராத வலியிலும், 
தீந்தமிழ் சொல்லாய் 
திலகமிட பெற்றெடுத்’தாய்’ ..
பாரெங்கும் பவனி வர 
பாசத்தை பரிசளித்’தாய்’ ..
நானிலம் நவிலும் வண்ணம் 
நல்லெண்ணம் நல்குவித்’தாய்’ .. 
கடலும் கரவோசை செய்ய 
கலைகள் பல கற்றுத்தந்’தாய்’ … 
உன்னிலிருந்து வந்தவள் உயிரோடிருக்க உதிரத்தை உவந்தளித்’தாய்’ ..
இவையெல்லாம் தந்த நீ
ஏன் அம்மா மரணித்’தாய்’ ??
என்றுள்ளம் கேட்குது..
என்னுள்ளம் கேட்குது…!

— ஸ்ரீ சக்தி
Tiruppur

0