நான்….நீ…..

“நான் பார்த்தேன்
நீயும் பார்த்தாய்.
நான் பேசவில்லை
நீயும் பேசவில்லை.
நான் செய்ததை
நீயும் செய்தாய்.
நான் நானாக
நீ கண்ணாடியாக……”

“நடந்து வந்தேன்
பின் தொடர்ந்தாய்.
எதிரே வந்தேன்
ஔிந்து வந்தாய்.
பயந்து கடந்தேன்
காரணமில்லாமல்
துரத்தினாய்.
நான் நானாக
நீ நிழலாக…..”

“நினைத்தேன்
நேரில் வந்தாய்.
மவுனம் கலைத்தேன்
பேசும் மலரானாய்.
கண் விழித்தேன்
கலைந்து போனாய்.
நான் நானாக
நீ கனவாக……”

“காட்சிக்கு எளிமையானாய்.
சாட்சியில்லா பதுமையானாய்.
மனசாட்சியை
மந்திரமாக்கினாய்.
நான் நானாக
நீ கானலாக…..”

“குடைக்குள் கோபுரமானாய்.
உடைக்குள்
ஓவியமானாய்.
விடைதெரியாமல்
வினாவானாய்.
நான் நானாக
நீ மட்டும் கவிதையாக…..”

முனைவர் இரா. ராமகுமார்

கன்னியாகுமரி

பிறர்போலி தான்கண்டு தன்போலி பிறரறியாது பிதற்றும்
என்போலி நண்பன் உனக்கும் நான் நண்பன்.
காரியக் கால்கழுவி கணக்குப் போட்டுக் கைவிரிக்கும்
கூரிய குற்றுவாள் கொண்டவன் உனக்கும் நான் நண்பன்.
வாழைத்தோலும் சீப்பும் தோல்விகாணும் வாரிவிடும்
கலைத்தொழிலில் சிறந்தவன் உனக்கும் நான் நண்பன்.
பகையென நான் விலகியிருந்த பாவிகளுடன் உறவாடி
சிகையென எனைமதிக்கும் உனக்கும் நான் நண்பன்.
பட்ட துன்பம் தாளாமல் பரிதவித்து நிற்கையில்
எட்டிப் பார்க்கா எலுவன் உனக்கும் நான் நண்பன்.
தோல்விக் கணைகளைத் தோரணமாய் அணிந்த போதிலும் தனிமையில் தவிக்க விட்டவன் உனக்கும் நான் நண்பன்.
கண்ணகியாய் நான் கண்ணீர் விடுவதைக் கண்டும் காணாது மாதவியுடன் மகிழ்பவன் உனக்கும் நான் நண்பன்.
திறமை எனக்கிருந்தும் வெளிப்பட்டால் வெற்றி பெறுவேனென
சிறுமை யுரைத்து சிரிப்பவன் உனக்கும் நான் நண்பன்.

Thinapakar E

இராமநாதபுரம்

நெகிழி
வெப்பத்தில் வினைபுரிந்து
உணவின் வழியாக
மில்லி மைக்ரான்களாய்
இரைப்பையில் குடிபுகுந்தேன்….

மண்ணுக்குள் புதையுண்டும்
மரணமின்றி பயணிப்பேன்
காற்றின் வழி காலனாய்
நுரையீரல் குடிபுகுவேன்…..
குடிக்காமலும் குடிகெடுப்பேன்
புதைத்தாலும் புற்றாவேன்…..
மானுடனே!
உனது சோம்பலுக்கு
அரிதாரம் பூசினாய்
நெகிழியானேன்!
உனது சோம்பலின் விடியலில்
மட்காத குப்பை நான்…..
மறுசுழற்சி பயனில்லை
நானின்றி மாசில்லை
செயற்கையிழை செயலிழக்க
இயற்கையை அரவணைப்பாய்!
விழித்தெழு மானுடனே
தலைமுறை தலைத்தோங்க……
இப்படிக்கு நெகிழி……

பி. ஹேமலதா

சேலம்

உழவு……..

முளை தழை கொண்டு தளிர
களம் தந்தது நிலம்

இருள் களைந்தாங்கே புலர சுடர் விரித்தது கதிர்.

முகில் திரள் சேர்ந்து கனத்து துளை கொண்டது மழை .

இதை வசமாக்கி உழவன்

வாழ வைத்தான் எமை.

சத்யா இரத்தினசாமி

இலங்கை

1