நுகர்வுக்காக மட்டுமே
நகர்ந்து திரியும் உயிரிகளை
உயரிய படைப்பான மனிதரென்றால்
நான் ஏன் நம்ப வேண்டும்

வர்த்தகம் நடக்குமொரு
வணிக சந்தை தனை
வளமான வையகமென்றால்
நான் ஏன் நம்ப வேண்டும்

முதலாளியிடம் சென்று
முடிவின்றி கூலிவுயர்க்கிறைஞ்சும்
முயற்சியை முக்தி தேடும் பக்தியெனில்
நான் ஏன் நம்ப வேண்டும்

முதலீடு செய்து
பதிலீடு எடுக்கப் பாடுபடும்
முதலாளிகளை சேவையாளர்களெனில்
நான் ஏன் நம்ப வேண்டும்

பொருள் புலன் மீது ஈர்ப்பை
புகுத்திடும் கூச்சல்களை
புனிதக் கலையிதுவென்று கூறின்
நான் ஏன் நம்ப வேண்டும்

வெறிகளைத் தீர்த்திடவே
குறி வைத்துத் தயாரிக்கும்
பொறிகளை விஞ்ஞான உச்சமெனில்
நான் ஏன் நம்ப வேண்டும்

– நற்புவி மகேந்திரன்
சென்னை

8