ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டது. கல்லூரி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்து பின் வேலையும் இங்கேயே கிடைக்கவே இது என் ஊராகவே மாறிவிட்டது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு பழைய நினைவுகளை தூசி தட்டிவிடும். பள்ளி நண்பர்களிடமிருந்து புதுப்புது சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வரும். ஓய் என்று அதட்டலாக கூப்பிட்டாலே அழுதுவிடும் மாலா, பக்கத்து தெரு சுரேஷடன் ஊரை விட்டு ஓடி போலிஸ் ஸ்டேசனில் புகுந்து நான் மேஜர் என் விருப்பப்படி இவனைத் தான் கல்யாணம் செய்வேன் என்று ஊரையே கதி கலங்க செய்திருக்கிறாள். இதைப் போல பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. என் காதுக்கு தான் எல்லாம் லேட்டாக கிடைக்கிறது. இப்படி ஏதோ ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை தான் இந்த முறையும் எதிர்பார்த்து சென்றிருந்தேன். விஷயம் இருந்தது, ஆனால் அது நாதனைப் பற்றியது. நாதன், அவன் பெயர் தெரியாத மாணவரோ ஆசிரியரோ எங்கள் பள்ளியில் இருக்க முடியாது. மாநிறம், கழுத்து வரை பின் முடி நீண்டிருக்கும், முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். ஊரில் ரௌடி மாதிரி திரிந்து கொண்டிருக்கும் கல்லூரி படிக்கும் அண்ணங்களுடன் தான் எப்போதும் இருப்பான். அவனை கண்டாலே எங்களுக்கு பயமாகதான் இருக்கும். ” டேய் சுப்ரமணி மவனே, இங்க வா!” என்று எல்லாரையும் அவர்கள் அப்பா பேர் சொல்லி கூப்பிடுவான். மதிக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தை அர்ச்சனை தான். தவறாமல் தினமும் பள்ளிக்கு வருவான், அவன் பொழுதுபோக்கே இங்க தான்.

கோடை விடுமுறை முடிந்து அன்று பள்ளி திறந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பிற்கு செல்ல ஆயத்தமாக காத்திருந்தோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்த வழக்கமாக இருக்கும் நான்கு செக்ஷன்களை ஆறாக பிரிக்க தலைமை ஆசிரியர் சொன்னதால் எங்கள் அனைவரையும் மைதானத்தில் அமர சொன்னார்கள். ஒவ்வொருவராக கூப்பிட்டு அவர்களை தனித் தனி வகுப்பறையில் சென்று அமர சொன்னார்கள். எனது பெயரும் பின் இராமனையும் அழைத்து ஒரே வகுப்பறையில் அனுப்பினார்கள். இராமன் எனது நெருங்கிய நண்பன், எனவே நாங்கள் சந்தோசமாய் ஓடிப்போய் முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டோம். பின்னாலேயே நாதனும் வந்தான் நேராக சென்று கடைசி பெஞ்சில் அமர்ந்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாகி விட்டோம்.

தெரிந்தப் பெண் ஒருத்தியின் பின் சென்று அவள் ரிப்பனை இழுத்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று கத்தி விட்டு அரை மைல் தூரத்திற்கு அப்பால் ஓடிவிடும் எங்களுக்கு மத்தியில் டீச்சரோட முந்தானையை இழுத்த அவன் பெரிய ரௌடியாகத் தான் தெரிந்தான். டீச்சர்கள் வகுப்புக்கு வந்தவுடன் அவனை வெளியேற்றி விட்டுத் தான் பாடம் நடத்துவார்கள்.

அப்பொழுது அரையாண்டு தேர்வு, ஆசிரியர்க்கு தெரியாமல் பிட் அடித்து கொண்டும், பக்கத்தில் இருப்பவனிடம் காட்டும் படி கெஞ்சி கொண்டும் சிலர் இருக்கையில் நாதன் யாரையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் இருந்து விட்டு வெறும் தாளை மடித்து கொடுப்பான். அறிவியல் தேர்வின் போது என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தான். விந்துவின் படம் வரைந்து பாகங்கள் குறிக்க என்ற கேள்விக்கு அவன் வரைந்த படத்தை என்னிடம் காட்டி சிரித்தான். அந்தப் படத்தை பார்த்து நான் கண்களை மூடிக் கொண்டேன். சிரித்துக் கொண்டே அந்த தாளை கசக்கி தூர எறிய பார்த்தான் ஆனால் அதற்குள் சார் அவனிடமிருந்து அதை பிடுங்கி கொண்டார். தாளைப் பிரித்து அவர் படத்தைப் பார்க்கும் நேரத்தில் நாதன் பள்ளியை விட்டு வெளியே ஓடி விட்டான். சார் நாதனைப் பற்றி தலைமை ஆசிரியடம் புகார் செய்தும் எதுவும் நடக்கவில்லை.

வகுப்பறை பெஞ்சில் தாளமடித்து கொண்டும் , தண்ணீர் டேங் உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்டும் , தனக்கென கிடைத்த அடிமை நண்பர்களை மிரட்டி கொண்டும் தான் அவன் பொழுது கழிப்பதை பார்த்திருக்கிறேன்.பெண்களிடம் அவனுக்கென்ன கோபமோ தெரிய வில்லை. எங்க வகுப்பறையை தாண்டி தான் பெண்கள் வகுப்பறைக்கு செல்ல முடியும். ஏதாவது சொல்லி அவர்களை திட்டி கொண்டே இருப்பான். அதனால் எங்க வகுப்பறையைத் தாண்டி போகும் வரை அவர்கள் காதை மூடிக் கொண்டு தான் போவார்கள். பசங்க யாராவது பொண்ணுங்ககிட்ட பேசுவதை பார்த்து விட்டால் அவ்வளவுதான். அந்த பெண் முன்னாடியே அந்த பையனை துரத்தி துரத்தி அடிப்பான்.

பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் பள்ளியில் சிறப்புத் தேர்வுகளை நடத்தினார்கள். ஒவ்வொரு தேர்வின் மறுநாளும் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களையும் காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது அழைத்துப் பரிசு கொடுத்தார்கள். முதல் இரண்டு நாட்களில் நானும் இராமனும் முதலாவது மற்றும் இரண்டாம் பரிசுகளை மாறி மாறி பெற்றோம். மூன்றாவது நாள் என் தெருவில் இருக்கும் கீதா முதல் பரிசை பெற்றாள். அன்று மதியம் நானும் இராமனும் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது எங்களை நோக்கி நேராக வந்த நாதன், “அடுத்த தேர்வில் நீ முதல் மார்க் வாங்கலானா காலி டா ! பொண்ணுங்ககிட்ட எப்பவும் தோற்க கூடாது” என்று கத்தினான். மறுநாள் நான் முதல் பரிசு பெறும் போது எனைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான்.

அப்படிப்பட்ட நாதனைப் பற்றி இன்று நான் கேள்விப்பட்டது விசித்திரமாய் இருந்தது. அவன் இப்போது ஆட்டோ ஓட்டுகிறானாம். கல்யாணம் ஆனதிற்கு பிறகு முழுவதும்
மாறி விட்டானாம். எந்த சச்சரவுக்கும் போவதுமில்லையாம். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்கானாம். இதனைக் கேட்ட பிறகு எனக்கு அவனை சந்திக்க வேண்டும் போல் இருந்தது.

மறுநாள் காலை குளித்து விட்டு கோவிலுக்கு சென்றிருந்தேன். பெரிய கோவில், சன்னதியைச் சுற்றி விட்டு மர நிழலில் அமர்ந்திருந்தேன். மனது அமைதியாய் இருந்தது. இயந்திர வாழ்க்கையின் நடுவில் இயற்கை ஒன்று தான் மன அமைதியை தருகிறது. சிந்தனை படர்ந்து கொண்டிருந்தது. அப்போது நாதன் கோவிலுக்குள் நுழைவதை கண்டேன். பக்கத்திலே ஒரு பெண், அவன் மனைவியாகத் தான் இருக்க வேண்டும். அவன் அவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்தான். அவன் தோற்றத்தில் மாற்றம் இருந்தது. தரிசனத்தை முடித்துக் கொண்டு எனக்கு சற்று தொலைவில் அவன் மனைவியுடன் வந்தமர்ந்தான்.

“சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு போகனும் சீக்கிரம் வந்துருங்க”

“கண்டிப்பா வந்துடரேன்”

அவர்கள் பேச்சு தொடர்ந்தது. ஆனால் என்னால் தான் ஆவலை அடக்க முடியாமல் நேரே அவர்களிடம் சென்றேன். அவன் மனைவியை இதற்கு முன் பார்த்திருக்கிறேன். ஆம் அவள் தான், எங்களை விட இரு வயது சிறியவள். பள்ளியில் காலை நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தின் போது அவள் தேசிய கீதம் பாடுவதை பார்த்திருக்கிறேன் மற்ற படி எதுவும் தெரியாது.

நாதன் என்னை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான். மட மடவென என்னைப் பற்றி விசாரித்தான். பிறகு அவன் மனைவியை அறிமுகப் படுத்தினான். அவள் பெயர் மீனா, தற்போது ஆறு மாதம் கருவுற்று இருக்கிறாள். பின், கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கு வர வேண்டுமென்று என்னை அவன் ஆட்டோவிலேயே வீட்டுக்கு விடாப் பிடியாக அழைத்து சென்றான். சிறிய வீடு, ஆனால் இருவர் தங்க நல்ல போதுமானது. சமையல் வேலை செய்வதாக சொல்லி மீனா சமையல் அறையில் பிஸி ஆகி விட்டாள்.

சிறிது நேரம் அமைதியாய் பொழுது கடந்தது. எங்கள் இருவர் மனதிலும் பல எண்ணங்கள் பாய்ந்து கொண்டிருந்தது. மெல்ல புன்னகைத்து அவன் வாழ்வில் நடந்த மாற்றங்களை கூற தொடங்கினான். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த பிறகு ஒரு வருடம் சும்மா தான் சுற்றிக் கொண்டிருந்தேன். உனக்கு தெரியும் சிறு வயதிலே அப்பா இறந்து விட அம்மா தான் பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் சமையல் வேலை செய்து வீட்டு செலவை பார்த்து வந்தாள். ஆனால் நான் சும்மா சுற்றுவதால் ஏதாவது வேலைக்கு போக சொல்லி திட்டிக் கொண்டே இருந்தாள். நானும் பொழுது போக்க பெயிண்ட் அடிக்க, சித்தாள் வேலைனு பார்த்துட்டு இருந்தேன். அம்மாக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம படுத்துருவாங்க. ஆனா இப்ப பாரு நல்லா உலாத்துறாங்க. அப்பெல்லாம் என்ன பத்தின கவலை தான் அவங்களுக்கு. அப்படியே ஆட்டோவ டியுல எடுத்து ஓட்ட ஆரம்பிச்சேன். சில சமயம் காலேஜிக்கு போக மீனா என் ஆட்டோவுல வருவா, ஆனா அப்பெல்லாம் எனக்கெதுவும் தோனல. ஒருநாள் நைட்டு யாரோ வீட்டு கதவ வேகமா தட்ணாங்க. மீனாவோட அப்பாவுக்கு நெஞ்சு வலினு ஆட்டோவ எடுத்துட்டு ஆஸ்பிட்டலுக்கு போனோம். ஆனா அவரு ஆஸ்பிட்டேலேயே தவறிட்டாரு. என்னால மீனா அழுவுரத பாக்க முடியல. அவங்க அம்மா இவள நினைச்சி புலம்பினு இருந்தாங்க. அதுக்கப்புறம் எல்லாம் வழக்கமா தான் போச்சு. ஆனா மீனாவ எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது. வாழ்க்கைய பத்தி பயமும் வந்திச்சு. அம்மாகிட்ட மீனாவ பத்தி சொன்னேன். அவங்களுக்கு சந்தோசம் தான் ஆனா மீனா வீட்ல சம்மதிக்கனுமே. என்ன பத்தி ஊருக்கே தெரியும். ஆனா அம்மா தான் நான் போய் பேசுரேன்னு சொல்லி மீனா வீட்டுக்கு போனாங்க. எவ்வளவோ சொல்லியும் அவங்க அம்மாக்கு இஷ்ட படல. ஆனா மீனா அவங்க அம்மாகிட்ட என்ன கல்யாணம் பண்ண ஓகே சொல்லி சம்மதமும் வாங்கிட்டா. இன்னைக்கு வரைக்கும் அவ எங்கிட்ட அதற்கான காரணத்த சொல்லவே இல்ல. ஆனா அவள நல்ல படியா பாத்துக்கனும், அதுதான் எனக்கு இருக்கிற ஒரே ஆசை. மீனா வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு நிறைய விஷயம் புரிய ஆரம்பிச்சது என்று சொல்லி மீண்டும் சிறு புன்னகையுடன் பேச்சை முடித்தான். மீனா காபி கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் இருவரும் கண்களால் சிரித்து கொள்வதை பார்த்தேன். சரி மறுபடியும் ஊருக்கு வரும் போது பார்க்கலாம் என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பினேன். கோவிலில் கிடைத்த அமைதியை விட இப்போது என் மனம் நிம்மதியை உணர்ந்தது.

7