அழகே அறியாய், அகத்தில் நிறைத்தேன் 
அமிழ்தே தரினும் அகலத் துணியேன். 
அலையில் சுழன்று ஆழியில் தொலைந்த 
அசையும் கொடியுடை ஆர்கலி கலனென 
அதரச் சுழிவில் இதயம் தொலைத்தேன். 
 
ஆடிடும் மயிலில் கூடிடும் அழகை 
ஆடையிற் வரைந்து சூடிடும் ரதியே, 
ஆதவன் கதிரெழும் காலையில் அனுதினம் 
ஆம்பல் மலரென அகத்திலே மலர்ந்தாய். 
ஆதலால் தேனதைத் தேடினேன் உன்னிடம்! 
 
இனிய குரலில் ஒருசொல் உரைப்பாய். 
இமயச் சரிவில் இடறி விழினும் 
இமையா துணிவு நெஞ்சம் உறைந்தும், 
இதலிற் சிரிப்பை இமைகள் காணின் 
இதயத் துடிப்பும் கொஞ்சம் குறையும். 
 
ஈரோ முதலோ எதுவென் றறியேன். 
ஈட்டிய துணிவெலாம் உன்முன் காணேன். 
ஈரிமை சிமிட்டிய சிறுநொடி போதும், 
ஈட்டியில் தாக்குண்ட எளியவன் நானே! 
ஈசல் போலே துடிப்பதை அறியாய். 
 
உன்னிதழ் உதிர்க்கும் ஒருசொல் போதும் 
உதிரத்தில் சோர்ந்திட்ட அணுக்களும் மீளும். 
உன்மொழி கேட்ட சிலகணம் மீண்டும் 
உயிர்வரை கேட்டிட ஒருவரம் வேண்டும். 
உலகம் நீயே, ஒப்புதல் தாராய்! 
 
 
ராஜேஷ்வர் இளங்கோவன்
குளித்தலை, கரூர்
2