-ஒரு சாமானியனின் குரல்

பதினாறோ பதினேழோ வயதிருக்கும்
முதன்முறையாக இங்கு வந்தப்பொழுது!
ஆணும் அழுவான் என
முதன்முறையாக அறிந்தேன்!
அவனின் கதறல்
நெஞ்செல்லாம் என்னவோ செய்திற்று!
காற்றில் கரைந்து
நாசித் துவாரத்தை தீண்டிச் சென்ற
அந்த நாற்றம் குடலை பிரட்டிற்று!
அவ்வப்பொழுது விரைத்து
எழும் எலும்பினை பார்த்து
உடல் நடுங்கிற்று!
அசராமல் அதனை
ஓங்கி அடிக்கும் அப்பாவை பார்க்க
ஆச்சரியம் கூடிற்று!

இதோ இருபது ஆண்டுகள் ஆயிற்று
என் அப்பாவாய் நான் மாறி!
இனியேதும் அழுகுரல்
நெஞ்சை அடைக்கவில்லை!
விரைத்தெழும் எலும்பேதும் பயமுறுத்தவில்லை!
காற்றில் வரும் வாசமது
வயிற்றை பிசையவில்லை!
மனசெல்லாம் மறத்து விட்டது!
எந்தன் தாய் தந்தை தவறினாலும்
அழுவேனா என்பது ஐயமாகி போனது!

பாட்டனோ பூட்டனோ
பிழைப்பிற்காக ஆரம்பித்த
வேலை பரம்பரை வேலையாகி போனது!

அதோ எந்தன் பதினேழு வயது மகன்
என்னை கண் எடுக்காமல்
கவனித்துக் கொண்டிருக்கிறான்!

ஊருக்கு அடுத்த “வெட்டியான்” வந்து விட்டான்!

 

— மைத்ரவர்ஷினி.ல.செ.

சேலம்

 

 

27