பூனைகள்

ராவோடு ராவக மதங்களின் அடிப்படையில்
உணவினை பிரிப்பர் ஒருநாள்,

கரும்பு கொண்டு வரும் சிவராஜூம்
வர போவதில்லை !

பிரியாணி கொண்டு வரும் அஹமதும்
இருக்க போவதில்லை !

கேக் எடுத்து வரும் ஆண்டனிகளும்
மிஞ்ச போவதில்லை !

அக்கிரகாரத்து பூனைகளுக்கும்,

கறிகடை பாயின் பூனைகளுக்கும்,

கண்களை மூடாமலேயே உலகம் இருட்டி இருக்கும் !

–அஹமத் இப்ராஹிம்
தென்காசி

———–


உலாவும் உயிர் பல பாரதிலே
உலாவி பெயர் பெற்றவை சில உயிரே
பெற்ற பெயர் பொருட்டு தரம் அவ்வுயிர்க்கே
பெறா பெயர் கொண்டு தரம் இழக்கிறதே

உயிர் தோன்ற யாவும் ஓர் தரமே
இவர் அவர் நிகர் என அகம் பாடிடுதே
அவர் எவர் இவர் யாவும் வந்தவை வழியே
நாளை பலர் கூட செல்வதும் பொது வழியே

வாழும் சிறு காலம் நன்றெனவே
வாழிய காலமதை பலர் வாழ்த்திடவே
சென்றும் வாழ்வோம் பலர் அகம் அதிலே
அகம் வாழா பார் அளக்க பயன் இலையே

— பிரவின் இராஜ்
சென்னை


என் கண்ணே…!

சகடம் அற்ற அத்தம் கண்ணே
அன்னநடை வேண்டாம் கண்ணே

கங்குல் வரும் நேரமடி கண்ணே
நம் குரம்பை சேர வேண்டும் கண்ணே

உறவியின் சுறுசுறுப்பு கொள் கண்ணே
விரைந்து நம் குரம்பை செல்வோம் கண்ணே

அசும்பு கொண்டு சிற்றில் செய்த கண்ணே
உன் சிற்றிலும் ஒருநாள் நம் மனையாகும் கண்ணே

உயர்ந்த ஓர்வு கொள் கண்ணே
உன் ஓர்வு உனை உயர்த்தும் கண்ணே

கவ்வை விலகி வாழ் கண்ணே
கனிவை காழகமாக உடுத்திக் கொள் கண்ணே

அல்கல் அவிழ் அயில் கண்ணே
உன் உடல் நலமே என் உள்ளத்தின் நலம் கண்ணே

– சுதா பிரியா ஆரோக்கியராஜ்
திருச்சி

 

18