வழித்தடத்தில் வளர்வது
இரண்டு சென்ம
பாவங்களை சேர்த்து பிறப்பது போல..

கால்நடைகள் கடித்து
சென்றது போக..

அடுத்த மழை
வரும் வரை
உயிரை தக்க வைப்பது
அசாதரண யுத்தம்..

கஞ்சத்தனமாய்..
இலைகளுக்கு
உணவு செய்து
காப்பாற்றி
வைத்த பின்னும்..

தலைமேல் ஏறிச்
செல்லும் வாகனங்களின்
அழுத்தம் நீக்க..

மூச்சடக்கி
மேல் நோக்கி நீருள்
எழும்பும் நுரையீரல் காற்று போல..

எழுந்த பின்னும்
மீண்டும் மீண்டும்
மிதித்து செல்லும்
இரக்கமற்ற
மனித கால்கள்..

ஊரடங்கிய வேளையில்
மிச்சம் வைத்த நீரை
வைத்து ஓரிலையை வளர்ப்பதற்குள்..
புலரும் பொழுது..

அதிகாலை நடைமுறைகள் தலை மீது ஆட்டம் போட..

வெளிச்சம் மெல்ல உக்கிரப்பட்டு..
மிச்ச நீரை ஆவியாக்கும்..

மிஞ்சிய இலைகளை பதம் பார்க்கும்.
பூச்சிகளின் பசித்த வயிறு..

ஆடுகள் வரும் முன்னே..
தன் பசியை தீர்க்க வந்த வெட்டுகிளி..
பால்காரன் சைக்கிள் டயரில் நசுங்கியதால்..

வருத்தப்பட சமயமில்லை..

வெட்டுகிளியின் இறந்த உடலை
கவ்வி சென்றது கருங்குருவி..
பாவம் மூன்று குஞ்சிகளின் வயிற்று பாடு..

ஓரமாக நிறுத்தி விட்டு
என் தலையில்
ஓன்னுக்கு அடிக்கும் ஆறறிவு..

கண்களை மூட முடியாமல்..
சகிக்கின்றேன்

தார் ரோடு போட போவதாக
சொல்லி கொண்டே நடைபயின்றன பெருசுகள்..

எங்களை அப்புறப்படுத்துவார்களா?

கொடுமைக்கு சற்றே
கூடுதலான வாழ்க்கை வாழும்

சிலருக்கு
மரணம் கூட ஒரு வித மகிழ்ச்சி தான்..

 

— சந்திரன்

Tirunelveli

0