தான் தூங்கிய பின் வீட்டுக்கு வரும் தந்தையிடம் இன்று,
அவர் கால்களுக்கு இடையே…
கைலியின் மேலே
ஆடிக்கொண்டு இருக்கிறான்…
ஆறுவயது சிறுவன்!!
அப்பொழுது…
அவன் நாசியை நனைத்தது
காற்றுத்துளிகள் மட்டுமல்ல
தந்தையின் வியர்வைத் துளிகளுமே!!

கொரோனாவைத் திட்டிகொண்டே…
பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிக்கொண்டே,
காசில்லாமல் கஷ்டம் கசியும்
கணவன் கண்ணனின் கைகளில்
மிச்சம் பிடிச்ச பணம் எனச் சொல்லி
தந்தாள் ஐந்தாயிரம் வள்ளி!!
அது சிக்கனத்தின் வெளிப்பாடல்ல!!
சம்சாரத்தின் ஒலிப்பாடல்!!

இருமல் வந்து படுத்திருக்கும்
ஐம்பது வயது ஆண்…
கொரோனாவோ எனப் பயந்து
வேலைக்கு வர அனுமதிக்காத முதலாளி!!
தூதுவளை கஷாயம்
கொடுத்து மடியில்
தூங்க வைத்த
எழுபது வயது அம்மா!!
நெடுநாள் கழித்து
தாயின் மடியில் ஒரு கதகதப்பு!!
தாயின் மனதில் ஒரு வெதுவெதுப்பு!!

குடித்து விட்டு அம்மாவை அடிக்கும்
ஒத்த நாடி அப்பாவைக் கண்டு
ஒதுங்கி நின்ற
ஒன்பது வயது மகள்,
இன்று நடுங்குகின்ற தந்தையின்
கைகளைப் பிடித்துக்கொள்கிறாள்!!
இருவரும்…
வார்த்தைகளை அல்ல!
கண்ணீரைப் பரிமாறிக் கொண்டனர்!!

இதுவரை கடந்த நாட்கள்
இதுபோல் அனுபவம் தரவில்லை!!
நல்ல உறவினை விட பெரிய வரமில்லை!!

கொரோனா…
மனிதர்களைத் தனிமை செய்தது!!
உறவுகளை வலிமை செய்தது!!

– தா.கோகுலன்
புதுச்சேரி

0