எறும்புகளுக்கு சர்க்கரை
டப்பாவை திறந்து வழிகாட்டும்
செல்லம்மையக்கா

பறவைகளின் கானம் கேட்கவே
தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்தாள்

அண்ணாச்சி கடையில்
வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகளுக்கு
மிட்டாய் வாங்கிக் கொடுத்து
தன் பெயரை
செல்ல அம்மை என பிரித்து
உச்சரிக்கச் சொல்லுவாள்

தெருவில் விளையாட வரும்
பொடுசுகளை அள்ளி அணைத்து
வாசம் பிடிப்பாள்
புழுதிக்கும் குழந்தை வாசமென்பாள்

அடைபடும் பொருளின் வடிவாய்
உருவெடுக்கும் தண்ணீராக
பார்க்கும் குழந்தைகளெல்லாம்
பிள்ளைகளாகத் தெரியும் அவளுக்கு

இப்படியாக, ஒருநாள்
கண்ணாமூச்சி ஆட்டமாடும்
குழந்தைகளை வேடிக்கைப்
பார்க்கையில்
தன் வயிற்றின் மீது
கையை படரவிட்டு
பேசிக் கொண்டிருந்தாள்

“20 வருடம் வயிற்றுக்குள்ளேயே
விளையாடுறியே ராசா ஒருதரம்
என்னை அம்மாவென அழைக்கமாட்டாயா?

என் முந்தானையில் உன் சுண்டு விரல் சுற்றிக் கொள்ளவேணும் வெளியில் வரமாட்டயா ஒரேயொருமுறை”

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை
பிரசவத்திற்கு பாட்டிக்கு சொல்லிவிடவா
நீ கோவித்துக் கொள்ளமாட்டாய்தானே!

– அரோரா மரியா
திருநெல்வேலி

1