அணிந்திருந்த காலணிகள்

அங்கங்கே கிழிந்தன;
கற்பரல்கள் காலணிகளுக்குள்
கணுக்கால்களை உறுத்தின.

காரைமுட்கள் காலணியூடே
கட்டாயமாய்ப்புகுந்து
கால்தசை-நரம்புகளைக்
குண்டூசிகளாய்த் துளைத்தன.

கரடுமுரடுக் குன்றுகள்…
கலக்கம்-நிறைக் காடுகள்…
கூரிய கோரைப்புற்புதர்கள்…
குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்…

அமர்ந்து அவ்வப்போது அவற்றை
அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்;
இயலவில்லை. எதனாலெனில்
இவைகள் கொஞ்சநஞ்சமல்ல.

எப்படியெப்படியோ முடித்து
என் இலக்கை அடைந்தபோதோ
என் இரத்த உறவினர்களுமே எனை
எள்ளிநகையாடக்கண்டேன்:

‘இவ்வெற்றுவேலை இவனுக்கு
இக்காலத்தில் எதற்குத்தானாம்?
இவனுக்கும்தானே இங்கு சீரான
இந்நெடுஞ்சாலைகளெல்லாமே!’

புன்னகைமட்டும் உள்ளுக்குள்
பூர்ணமாய்ப் புரிந்தேன் – எனக்கோ
புதியபாதையொன்றைக்கண்டுப்
புண்ணியம்பெற்றப் பூரிப்போ…???

— கிறிஸ்துராஜ் அலெக்ஸ்

84