அவள் பெயர்

திருவிழா கூட்டத்திலும்
கண்டுபிடித்து
என்னைப்பற்றி
நூறு கேள்விகள் கேட்டு
என் மகளுக்கு
நூறு முத்தம் கொடுத்த
சுமதி
கடைசிவரை
என் மகளின் பெயரை
கேட்கவேயில்லை…

-துரை சந்தோஷ்


மனைவி இல்லா முதுமை

நதியோடு குளிர்காற்று
நயனம் பேச ,காணும் போது…
அவள் நாசியோடு தூயசுவாசம்
தவழ்ந்த நினைவு கொண்டேன்!!

பனியில் நனைந்த பூங்காவில்
பூக்கள் படர்ப்பைக் காணும் போது
அவள் மேனியில் என் முத்த துகள்கள்
பதிந்த நினைவு கொண்டேன்

குருவிகள் இரண்டு கூடு செல்லும்
மாலை நேரம் காணும் போது
சொல் ஏதும் இல்லாத சுகம் தோன்ற கண்டேன்!!

தளர்ந்துவிட்ட தோளில் இன்று பேத்தி உறங்கும் போது…
மறைந்துவிட்டது மனைவி மட்டுமல்ல
என் மகிழ்ச்சி என கண்டேன்!

-தா.கோகுலன்
புதுச்சேரி

0