உரிமைகள் கருவருக்கப் படும் போதும் சுற்ற உறவுகள் வேடிக்கை காண்கையிலும் ஏது செய்யும் இம்மனம்

தலை கவிழ்ந்து செல்ல மதியியந்த செயலை செய்தோம் அல்லவே

மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒதுக்கப் படுவோமாயின் சமதர்ம சத்ய நாடிதுவோ

உணவிட்டவன் உடல் சுட்டெறிக்கப் படும் போது அகமென்னும் தீ ஏனோ அணைய மறுக்கிறது

நசுக்கப் பட்டவை எல்லாம் கிளர்ந்தெழும் போது உருப் பெறுகிறது போராட்டம்

பல தியாகங்களும் வலிகளும் அதன் தொடக்கம்

பல தியாகங்களும் வலிகளும் அதன் முடிவு

சில சட்டங்கள் எழுதிய பேனா முனை ஏற்படுத்திய காயங்கள் அவற்றுள் இரணமாய் சீழ் கோர்த்துள்ளது

போராட்ங்கள் பல பிம்பங்கள் கொண்டது

வெவ்வேறு திசைகளில் அதன் பிம்பம் மாறுபடும்

அதன் வடிவம் புத்திகளுக்கு ஏற்ப செதுக்கப்படும் – செதுக்களில் சிதறல்கள் இருந்தே தீரும்

பார்க்கும் கண்களுக்கு அதன் உணர்ச்சிகள் வேறுபடும்

சில கண்ணீரையும் சில கோபத்தையும்

சில ஏளனத்தையும் சில ஏக்கத்தையும் சில பேராசையும் என வெளிப்படும்

பலவற்றின் முடிவுகள் பசியினால் மயங்குகிறது

சிலவற்றின் முடிவுகள் செல்வத்தினால் அழுத்தப்படுகிறது

சில முடிவுகள் சிவப்பினால் தெறித்து ஓட்டப் படுகிறது

சிலவே நின்று வெற்றி காண்கிறது

சப்தங்கள் இருக்கும் இடத்தில் பிரம்மம் இருக்கும்

அந்த சப்தங்கள் ஓங்கி ஒலிக்கட்டும்

 

1