எது காதல் எது நட்பு எது பாசம் என்று தேடி
ஏது காதல் ஏது நட்பு ஏது பாசம் என்று யாவற்றையும் தொலைத்து
இது காதல் இது நட்பு இது பாசம் என்றுணர்கையில்
வாழ்க்கையின் எல்லையில் இருப்போம்

இதுதான் அன்பை வெளிப்படுத்தும் வழி
இது தான் அன்பு என்று நாம் பல முடிச்சுகளை போட்டு கொண்டே செல்கிறோம். ஆனால் முடிச்சுகளை அவிழ்க்கும் போது தான் அதன் தடங்கள் யாவும் ஏற்படுத்தியது காயங்கள் என்றுணர முடியும்.

வரையறை இல்லாமல் இருக்கிறது அன்பு. கண்களால் விசாரிப்பதிலும் சிறு சிறு புன்னகைகளிலும் அவை பரிமாறி கொண்டே இருக்கும்.

ஆற்றலை எவ்வாறு உருவாக்கவோ அழிக்கவோ முடியாதோ அதுபோல் தான் அன்பும். உங்கள் அன்பு ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடலாம் ஆனால் அழிக்க முடியாது. உங்கள் அன்பை எதிர்படுபவர்களிடம் பரிமாறுங்கள். அது அப்படியே உருவத்தை மாற்றி கொண்டு பரவி கொண்டே இருக்கும். அதன் இன்பத்தை உணருங்கள்.

வார்த்தைகளின் ஒலி ஒளி வடிவம் பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. அவற்றை காது கொடுத்து கேளுங்கள் சொல்பவரின் அன்பு பெருகும். அகமகியும் வார்த்தைகளை மனதார பேசுங்கள்.

எப்படி பச்சை மரங்களை காணும் போதெல்லாம் கண்கள் குளிர்கிறதோ அது போல் முகத்தை புன்னகையோடு வைத்து கொள்ளுங்கள் உங்களை காண்பவரின் கண்களும் குளிரட்டும்.

யாவரும் ஏங்கி நிற்பது அன்பெனும் பண்பிற்கு தான். உரு கொண்டு பிறந்தது முதல் அருவாகி மறைந்தாலும் நிலைப் பெற்று இருப்பது செய்த அன்பின் வினையது தான்.

வெறுப்புகளை கண்மூடி இருளினில் புதைத்து விடுங்கள். விருப்பங்களை முறைமையாய் உறைத்து தான் பாருங்களேன்.
வாழ்வு செம்மையாய் இருந்திடும் செம்மொழியாய் சுவைத்திடும்!

— காவியங்கள் படைப்போம்

0