கருமை விரும்பா கனவான் களினால்
பொன்னிற மேனிக்கு பொன்னிலே முலாஅம்
பூசுவது போன்று புகழ்ந்த நிமித்தம்
ஆரிய மரபுக்கு அடிமை ஆனது!
கனவானும் நெஞ்சம் கனக்கும் படியே
பதிலைச் சொன்னேன் ‘புதுக்க விதையாய்’
மனத்துள் விதைத்த ‘மா’நிற விதையாய்!
தங்க நிறமுதற் தேங்காய் நிறம்வரை
சுவைத்து சலித்த அனைத்தும் என்னாட்டில்
சுவையே பார்க்கா உழைத்து களைத்த
கரிய மேனியில் கறந்த வியர்வை!
கேட்டதும் எதிர்த்தான் கெட்டது கருமை
சமயம் பிடிக்கா நிறமது என்றான்
சமயம் பார்த்து சன்னமாய் சிரித்து
அன்னம் சுவைக்க என்னவன் சிந்திய
எண்ணற்றக் குருதியின் நிறத்தை எடுத்து
எந்தன் வரியில் கொட்டி காட்டினேன்
வறுமையை வரியில் அன்றி நிறத்தில்!
இம்முறை நிறத்தை வன்முறை என்றான்
இமைப்பும் கூச்சம் இன்றி
சிகப்பு விளக்கில் சிலாகித்த பிறகே!

– தமிழொளி

காஞ்சிபுரம்

0