எண்ணங்களை மட்டும் கொண்டு
எழுத்துக்களை வடிக்கிறேன்
அதன் வடிவங்கள் எப்போதும்
அமைதியாய் அன்பாய் எனை நோக்கும்

காலத்தின் மாயைகளில் கொண்ட
களி வடிவம் பெரிதும் மாறாமல்
ஏனோ நோக்கங்கள் மாறுவதினால்
அதன் தாக்கங்கள் கூடுகிறது

மார்பில் கனத்திருக்கும்
மணித்துளிகளை சேகரித்து
வரிகளில் திணிக்கும் போதுதான்
எழுத்துக்கள் சங்கமமாகிறது
அச்சங்கமத்திலே நான் வாழ்கிறேன்

உறைந்து காய்ந்த கரு மையினில்
என் உயிரோட்டம் இருக்கிறது

நீண்ட நேர மௌனத்திலும்
இரைந்து ஒலிக்கும் அதிர்வுகளிலும்
சல சலப்பை ஏற்படுத்தாமல் – என்னுள்
சில சொற்கள் விடியற்கால ஆறாய்
ஓடிக் கொண்டிருக்கும் – அதன்
ஓசைதனில் என்னுள் நான்
விசாலாமாய் விரிந்திருப்பேன்

மெய்மை பொய்மைகளை
வெவ்வேறாய் ஒருங்கே போர்த்திக்கொண்டு
மெதுவாய் தொட்டுச் செல்லும்
காற்றின் போக்கினிலே எந்தன்
ஓரிரு வரிகள் அசைந்தாடும்

தொடர்ந்து நீளாத இன்பத்தையும் அது
தருந் துன்பத்தையும் – ஓர்
குவியலாய் சேர்ந்திடாமல்
திசையெங்கும் காணும் வெளியெங்கும்
துளி துளி திரவியமாய் தெளித்திட
இவ்வரிகளுக்கோர் யுக்தியும் சக்தியுமுண்டு

நானும் எண்ணமும் அது தருந் வரிகளும்
என் தனிமைக்கு நான் தருந் விருந்து
சுவை தெவிட்டாமல் அதை என்றும்
தரும் தமிழே என் அன்னை!

94