இருட்டை கிழித்து விரையும் வாகனத்தில்
சன்னல் ஓரக் காற்றினில்
நின் வாசமே தொடர்ந்தது – ஏனோ
அப்பயணம் இன்னும் முடியவில்லை

துளி துளியாய் வெளிச்சங்களும்
கை காட்டியே நெடிய மரங்களும்
எதிர்பாரா தூசிகளும்
அதனூடே காலமும்
கடந்து கொண்டே இருக்கின்றன

ஒரே வாக்கில் அமர்ந்து கொண்டு
அலுத்து போய் திரும்பும் போதெல்லாம்
ஏதேதோ நினைவு தட்டும்

என் தோள் சாய்ந்து நீ அமர்ந்திருப்பதாய்
சப்தங்கள் எல்லாம் அமைதியாய்
நின் மூச்சாய் மாறி இசைப்பதாய்
வான் பறக்கும் ஓர் சோடி பறவை
சன்னல் வழி நம்மை காண்பதாய்

அந் நினைவுகளின் தடங்களில் தான்
என் பயணம் நின்னை தேடி

இமைகளின் அடி இருளில்
தொலைந்துப் போன நின்னை

சுவாசிக்கையில் உள் சென்று
மீண்டு வராத நின்னை

நிழல் தரா இரவினில்
நிலையான இருளாய் ஆகிய நின்னை

நின்னை தேடியே
என் பயணம்

தூரத்து மலை உச்சி மரங்களில்
தூங்கும் குளிர் காற்றாய்

கனமான கரு மேகங்களில்
கரு தாங்கியிருக்கும் வான் வெளியாய்

விழிகள் வியந்து பார்க்கும் எவ்வித இடங்களிலும்
நின்னை தேடியே என் பயணம்..

ஓர் நாள் வரும் சந்திப்போம்
பின் சேர்ந்தே தொடர்வோம் புதியதோர் பயணத்தை…

6