இலை விழு துளியொன்று
கனத்து நுனி வந்து
நுனி யதன் அரவணைப்பில்
சற்றே மேனிப் பருத்து – கீழ் நோக்கி

மெல்லியவளின் கன்னம் விழ
மெல்லியவள் நளினம் கொண்டு
துளியதை துடைத் தெறிய
துடைத்தெறிந்த துளியது
பெண்மையவள் கூந்தலுரசி சிதற

பரவியது ஈரப்பதம்
நதியதன் கரையோரம்
கொண்டதொரு ஓசை போல்
சிலிர்த்தது கானங்கள்

துளியது கூட்டத்துடன்
காற்றுடன் மோதிக் கொண்டு
நின்றிருந்த மரத்தையெல்லாம் ஆட்டுவித்தன

சட சட ஓசையிலே
கருத்திருந்த நேரத்திலே
அங்கங்கள் ஈரங் கொண்டு
சுருங்கிய இறகுடன் கூடிய பறவைகள்
மௌனமாய் அழகொளி தந்தன

காட்சிகள் வேறாயின
அதில் ஓர் இன்பம் இதழ் சேர்ந்தன
இன்பத்தினூடே நினைவுகள் பெருகி
நெஞ்ச கிளர்ச்சிகள் அதிற் தோன்றின

அவை மழலை நினைவுகளாய்
மீண்டும் மழையினில், அது தந்த
தெருவோர ஓடையினில் – துள்ளி
கால் பதித்தன

குளிர்ச்சியும் அக கிளர்ச்சியும்
உடலை இருக்கமாய் அணைத்திருக்க
நொடிகளை மெது மெதுவாய்
சிறு துளியினுள் அடக்க முயன்றேன்

அவை மீண்டும் கனத்து நின்றது.

0