வர்ணிக்க உகந்த வார்த்தைகள் எல்லாம் குவியலாய் சேர்ந்திருக்க
குவியலை சேராமல் ஒதுக்கப் பட்ட சிதறிய வருந்திடும் வார்த்தைகளிடம்
அவளைப் பற்றி கூறி வைப்பேன் என் தனிமை நேரங்களில்

உற்சாகத்தில் அவைகள் எங்களை கொண்டு அவளதிகாரம் எழுதவும் என்றென்னிடம் பணித்தன

அழகியல் வார்த்தைகளே போதாதென்கிறேன் உங்களை வைத்தென் நான் செய்வேன் என்றேன்

இலக்கணம் அறிகுவாயோ ?

ஏதோ என்றேன்

ஒலியின் பண் செவியினிமை தருமாயின் வார்த்தை கோர்வையின் அர்த்தங்கள் புலனின்பம் தருமாயின் அஃதே கவிதை

என்றவை மேலும் ,

எவற்றிலும் எவ்வகையிலும் கற்பனை தீட்டுபவனே கவிஞன் என எனை சீண்டின

எப்போதோ கேட்ட பாடல்கள் பள்ளி பருவ ஞாபங்கள் –  என சம்பந்தம் இல்லாத கோர்வையான நினைவுகள் எல்லாவற்றையும் இரசிக்கிறாய் காரணம் அவள் தானே

சீண்டலை தொடர்ந்தன

விடியல் பொழுது திடீர் விழிப்புகள் தரும் ஆய்ந்த எண்ணங்கள் என்னவெல்லாம் பேச வேண்டும் ஒத்திகை பார்க்கிறாய்

உன் சிரிப்பு போதும்,  மழையினில் நனையும் போது குளிர்ந்திடாமல் இருக்க என சொல்ல நினைக்கிறாய்
இருந்தும் நனையாமலேயே மௌனமாய் இரசிக்கிறாய்  மழையினை அவள் அருகில் இருப்பதால்

எத்தனையோ மாலை நேரங்கள் தனிமையின் அமைதியில்
அறிந்திடாத நாம் அறிந்து கொண்ட நாம் என
உங்கள் உரையாடல்களை நினைவு கூறுகிறாய்

ஆமாம் இப்போது என்ன என்று  இடைமறித்தேன்

எழுதியது ஆயிரம் அவள் சேராமல் இருக்கையில் உங்களை வைத்து எழுதினால் மட்டும் கொடுத்திடாவா போகிறேன் என்றேன்

அடே மடையா, குரலை தாழ்த்தி சத்தமிட்டன அவை

கவிஞனை வார்த்தைகள் கூட மதிப்பதில்லை எண்ணிக் கொண்டேன் நான்

இலக்கணம் ஏதோ தெரிந்து வைத்திருக்கிறாய், எனை சீண்டுவதில் மட்டும் குறைவில்லை தொடர்ந்தன அவை

இலக்கிய நடையெல்லாம் ஒவ்வாத காலமிது
அர்த்தமற்றவையே எனைப் பாரென்று ஆகாய முழுதும் சிரிக்கிறது – ஆனால் நாங்கள் ஒன்றும் அர்த்தமற்றவர்கள் அல்ல காலத்தின் நீட்சியில் உருமாறியுள்ளோம்

எங்களை கொண்டே நீ அவளதிகாரம் செய் என்றன தோரணையையாய் அவைகள்

வம்பெதற்கு என்று நான் சம்மதித்தேன்…

உடைகளில் நாகரீகம் தேவைப்படும் தானே…

1