யார் அறிவார் பெண்ணே

முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது

பிடித்தது முதல் இரசித்தும்
இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது

பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை
இருந்தும் இது ஏதோ செய்கிறது

யார் அறிவார் பெண்ணே

ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம்
அவை நமக்காய் அரும்புகிறது

சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய்
நம்முடன் வருவதும் துணையாய் இருக்கிறது

பேச்சுக்களின் தாகம் குறைந்து மௌனத்தின்
குளிர் காற்றை அருகருகில் உணர்ந்தோம்

திடீர் பார்வைகளில் சிக்கி கொண்டு புருவத்தை உயர்த்தி
ஏனென்கையில் உதடுகளை பிதுக்கி ஏதுமில்லை என்பதில் தான்
முதல் தகவல் பரிமாறினோம்

யார் அறிவார் பெண்ணே

அழகியலாய் அனைத்தும் தெரிந்திட
கூட்டமுடன் கோவில்களுக்கு தனியே சென்றோம் – காத்திருக்கும்
வரிசைதனில் நாவாட பயின்றோம்

முழுவதும் இருள் போர்த்தி இரவது வரும் போது
தொலைவினில் இருக்கும் நாம் அருகினில் ஏதோ தேடுவோம்
அகம் முழுவதும் ஆய்ந்திடுவோம்

உன்னிடம் ஓர் நாள் உரைத்திட வேண்டுமென்று
சில வார்த்தை மட்டும் நான் பத்திரம் செய்திருக்கிறேன் – அவை
தப்பியும் வந்திடாமல் காலன் என் நாவில் கலங்காமல் தடுக்கிறான்

சொல்லாமலே இனித்திடும் காலமிதில்
நின் கூந்தல் தீண்டும் நெருக்கம் போதும்

மௌனமாய் அமர்ந்திருக்கும் இருக்கைகள் போதும்

ஓரப்பார்வைகளும் கன்னம் சிவக்கும் சிரிப்புகளும் போதும்

யார் அறிவார் பெண்ணே

இரசனைகள் நம்முள் புதைந்திருக்கிறது

அதில் காதல் மலர்கள் பூக்குமோ என்னவோ

95