என்ன செய்யும் எழுத்தென எண்ணிப் பார்த்தேன்
எண்ணியதன் முடிவில் ஒன்று தெளிந்தேன் – நமை
எண்ணச் செய்வதே எழுத்தென்பதறிந்தேன்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமெனில்
கண்ணைக் காப்பதே கலையின் பெருமை

பெரியாரின் எழுத்து சுயமரியாதை பேசும்
அண்ணலின் எழுத்தில் சமூகநீதி இருக்கும்
பகத்சிங்கின் எழுத்தினிலோ புரட்சி இருக்கும்
பொதுவுடைமை பேசுதற்கு மார்க்ஸின் எழுத்து வரும்
அண்ணாவின் எழுத்தோடு அழகு தமிழ் தவழ்ந்து வரும்

அறம் சார்ந்து பொருளீட்டி இன்பமுடன் வாழ்வதற்கு
அய்யன் வள்ளுவனின் அமுத குறள்கள் போதும்
இருண்ட வீடுதனில் குடும்ப விளக்கேற்ற
புரட்சிகவிஞரவர் எழுத்து ஓடி வரும்

உறங்க வைக்கும் எழுத்துண்டு – நமை
உறங்கவிடாத எழுத்துமுண்டு

இலக்கு நோக்கி துரத்தும் – சில
மூலையில் கொண்டுபோய் முடக்கும்

ஒற்றுமை உணர்வை ஊட்டி வளர்க்கும் – சில
பிரிவினை நஞ்சை நெஞ்சில் விதைக்கும்

அழவைக்கும், அழுத கண்ணீர் துடைக்கும்
சிரிக்க வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்

காயப்படுத்தும், மயிலிறகால் மருந்தும் போடும்
தலைகோதி தோள்சாய்த்து ஆற்றுப்படுத்தும்

அறிவை விரிவு செய்யும், மனிதம் வளர்க்கும்
ஓடிச்சென்று உதவ வைக்கும்

நல்வழிப்படுத்தும், நல்லவனாய் வாழவைக்கும்

நல்லனவை மட்டுமா எழுத்து செய்யும்
தீயன செய்யும் எழுத்தும் உண்டு
எழுத்தென்பது நல்லதெனினும் அதில்
நன்றும் தீதும் கலந்தேயிருக்கும்

அல்லவை நீக்கி நல்லது கொளல்
அஃதொன்றுதானே வாசிப்பின் அழகு

நல்லதை வாசிப்போம்
வாசிப்பை நேசிப்போம்
வாசிப்பை சுவாசிப்போம்

 

– மணிவண்ணண் மலையரசன்
திருச்சிராப்பள்ளி

4