தென்கடல் தீண்டிய
தென்றலது,
இளம் பூவுக்குள்
புகுந்திங்கு போகுதடி!!

எந்த பூவுக்கும்
பாரபட்சம் இல்லையடி!!

வண்ணத்திரு எழில்
வையகத்துள்-பல
நீளக் கதிர்களும்
வீசுதடி!!

இதில் நிர்க்கதி
யாருக்கும்
இல்லையடி!!

கான குயிலோசசை
உணரும் காதில் -ஒரு
காதல் இன்பம்
ஊறுதடி!!

இதில் வயது
வரம்பு இல்லையடி!!

நீலக் கடலலை
வீசிவந்து-எங்கும்
நிற்கும் காலைக்
கூசுதடி!!

இதில் சாதி
பேதம் இல்லைடி!

மனிதனைத் தவிர
மனித இனத்துக்குள்
பிரிவினைப் பார்ப்பது யாரடா !!
உன் அறிவினை நீயும் தீட்டடா!!

கீழ் என்றும், மேல் என்றும்
கீழோர் வகுத்த நியதியைத்
தீயென்றும், பேயென்றும்
கூவிக்களிப்பாயோ !!

சில வீணர் கூட்டம்
இங்குத் தீயில் வீழ்த்தி
நல்ல ஞானத்தீ
நீ அளிப்பாயோ?!

சமத்துவத்தீயைச் சுடர்விட்டு எரித்து,
சமநிலை படைப்பாயோ, மனிதா நீ?!!

– தா.கோகுலன் (தா.கோ)

புதுச்சேரி

42