அறியாமை இருளுக்கு ஆதித்ய ஒளியூட்டி
அறிவுக் கேணிதனை அழகுறத் தூரெடுத்து
வறியோனும் வித்தகனாய் வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வரமாய்க் கிட்டிய விருட்சமன்றோ நூலகம்!

கலாச்சாரப் பறைசாற்றும் இலக்கிய வேர்துவங்கி
கணிப்பொறிக் கதைசொல்லும் காலக் கிளைவரை
பலாயிரம் நூல்களைப் பதுக்கியுள்ள பொக்கிஷம்
பயனுறப் பழகிட்டால் வெற்றியது நிச்சயம்!

விழிப்புணர்வு ஒளிதேடி வேறெங்கும் போகாதே
வாழ்ந்தோரின் வரலாறு வாசித்திடு வந்திறங்கும்
சுழித்தோடும் நதிபோல சுயசிந்தை தெளிவாகும்
சுதந்திர எண்ணங்கள் சாதனைச் சிறகடிக்கும்!

முன்னேற்ற ஏரிதனில் முயற்சிப் படகுவிட
முத்தான நெறிகூறும் முத்தாய்ப்பு நூல்களுண்டு
சின்னச்சின்ன தொழில்துவக்க சீரான வழிகாட்டும்
சத்தான ஏடுகளின் சொத்தான குவியலுண்டு!

பொழுதுபோக்கு நாட்டத்தில் பொன்னான நேரத்தை
விரயமாக்கித் திரிவதால் வீணாகும் எதிர்காலம்
தொழுதுண்டு நூலகத்தை அனுதினமும் நாடிட்டால்
பழுதுநீங்கி வாழ்நாளில் பண்பட்டு உயர்ந்திடலாம்!

– முகில் தினகரன்
கோயமுத்தூர்

1