ஒரு அழகிய நதிக்கரையோரம்
வானை பார்த்தவாறு செங்குத்தாக
வளர்ந்து நின்றது பச்சை நாணல்கோரைப்புற்கள்

நதிக்கரையில் ஓடுவது
நதி எனும் நீர் மட்டும் இல்லை
விதி எனும் காலமும் தான்

வளர்ந்தப்பின் பிடிங்கி எடுக்கப்பட்டு
தீரா குடைச்சலில்
மீளா கோரைப்புல்கள்
நீங்கா வலியுடன்
பச்சை நிறத்திலிருந்து காய்ந்து
பழுப்பு நிறமாகி
வெள்ளை நூல்களால் கோர்க்கப்பட்டு
மஞ்சள் சிவப்பு நீல சாயம் பூசி
ஒரு கோரைப்பாயாய்
பல புட்டிகளை தாங்கித் தாங்கி
சொரனைகள் அறுந்து
இறந்து கிடக்க
குழந்தை ஒன்று தவிழ்ந்து விளையாடி
பாற்பற்களால் பாயை கடித்து
பிச்சி எடுத்தது ஒரே ஒரு கோரைப்புல்லை

தன் சந்ததியே பாயில் பிண்ணிக்கிடக்க
தனியாக்கப்பட்ட கோரைப்புல்லை
பெருக்கி அள்ளி குப்பையில் போட்டப்பின்
அது முதன்முதலில் வெளியுலகை கண்டது குப்பையையும் கூட ரசித்தது

மெல்ல ஒவ்வொரு குப்பை மேடுகளையும் கடந்து
புழுதியில் புரண்டு
மழையில் நனைந்து
மலங்களை உரசி
சாக்கடையில் உருண்டு
காற்றில் பறந்து
அந்நதிக்கரைக்கே வந்தது

கூட்டம் கூட்டமாக பறிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும்
நாணல் புற்களை கண்டு
அது சிந்திய கண்ணீர் துளிகள்
அதன் உடல் வழியே கால்களைத் தொட்டு தரையில் விழுந்தது
ஒரு கீற்றில் வழியும் மழைத்துளியாய்

மனிதர்கள் குளிர்காய விறகுகளை எடுக்கும்பொழுது தப்பித் தவறி
சிக்கிக்கொண்டது இவ்வொற்றைக்கோரை

நெருப்பில் உடல் கரைந்து மெல்ல மெல்ல இறந்துக்கொண்டிருக்கும் கோரைப்புல் சிரித்துக்கொண்டது

எவனோ போட்ட முடிச்சில்
சாயமிட்டு கட்டப்பட்ட ஒரு பாயாக
வாழ்ந்துக்கொண்டிருக்கும் நாணல்கோரைப்புற்களில்
ஒற்றைக் கோரை மட்டும்
இன்று மோட்சம் அடைகிறது

-இஜாஸ்
சென்னை

0